கட்டுரை

திமுகவுடன் விஜயகாந்த்?

நாகராஜசோழன்

விஜயகாந்த் தன் கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்களை அதிமுகவிடம் இழந்திருந்தாலும் 2014 தேர்தலை நோக்கிய அரசியல் காய் நகர்த்தல்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன.

கடந்த 25-ம் தேதியன்று சென்னையில் நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்திலும், விஜயகாந்த், வழக்கம்போல, ‘கடவுளுடனும் மக்களுடனும்தான் கூட்டணி’ என்று மிகக் கவனமாக பழைய பல்லவியையே பாடினார்.

கடந்த முறையைப் போலவே, இந்த எட்டாவது பொதுக்குழுக் கூட்டத்துக்கும் விஜயகாந்த் தேர்ந்தெடுத்த இடம், கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரம் சிறீ வாரு கல்யாண மண்டபம். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள், ஜெயலலிதா கலந்துகொள்ளும் அதிமுக பிரமுகர்களின் குடும்பத் திருமணங்கள் நடக்கும் இடம் இது! ஆனால், மண்டபத்தில் அதிமுகவுக்கு எதிராகத்தான் அதிக நேரம் பேசினார், விஜயகாந்த்.

தேமுதிகவின் அறிவுஜீவியும் விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாஃபா பாண்டியராஜன், அதிமுக மீது காரம் காட்டிப் பேசி, கூட்டத்தை உசுப்பிவிட்டார். “தேமுதிக ஒரு ஏறுமுகக் கட்சி என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்” என்ற பாண்டியராஜனின் கருத்தை, அங்கு பேசிய அனைவருமே வழிமொழிந்தனர். சில மாவட்டச் செயலாளர்கள், தனித்துப் போட்டியிட வலியுறுத்தியபோது, அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் அது சரியாக இருக்குமே தவிர, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அது சரிவராது என அவர்களின் கருத்தை மறுத்துப் பேசியவர்கள் அதிகம்! அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது அனைவரின் பேச்சிலும் தெளிவாகத் தெரிந்தது.

கடைசியாகப் பேசிய விஜயகாந்த்தும் அதற்கு முன் பேசிய அவரது மனைவி பிரேமலதாவும் அதிமுக ஆட்சிக்கு எதிராக பெரும் போராட்டம் என்று சொன்னது, அதிமுகவுடனான கூட்டணிக் கதவை மூடியதையே உறுதிபடக் காட்டியது. பொதுக்குழுவில், கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட விஜயகாந்த், கடைசிவரை திமுகவுடன் கூட்டணி என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதே சமயம், திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் சூசகமாகக்கூடக் குறிப்பிடவில்லை.

அண்மையில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகள் திருமண அழைப்பிதழை தன்னிடம் நேரில் கொடுத்தது பற்றிக் குறிப்பிட்ட விஜயகாந்த், “பொண்ணு கல்யாணத்-துக்கு பத்திரிகை கொடுத்தாரு. அதவச்சு கூட்டணினு பேசுறாங்க. அவர் எனக்கு நல்ல ஃபிரண்ட். ஆனாலும், ரொம்பா நாளா நேர்ல பார்த்துக்கல. அவருக்கு ஏதாவது கட்டுப்பாடு இருந்திருக்கலாம். இப்போ, அது இல்லாம போயிருக்கலாம்” என தனக்கே உரிய பாணியில் விஜயகாந்த் பேசியதும், அரங்கில் இருந்த பெரும்பாலானவர்களும் குபுக்கென சிரித்துவிட்டார்கள். அதே சமயம், தன்னுடைய கல்யாண மண்டபத்தை திமுக ஆட்சியில்தான் இடித்தார்கள் என்பதையும் சொன்ன விஜயகாந்த், அதற்கு மேல் எதுவும் வார்த்-தைகளை விடாமல் நிறுத்திக்கொண்டார்.

மத்திய அரசின் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லும் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டவர், ஏற்கனவே காங்கிரசுடன் இணக்கமாக முயன்றபோது மட்டும் மத்திய அரசு நடந்துகொண்டது நன்றாக இருந்ததா? என எதிர்க்கேள்வி கேட்டார், விஜயகாந்த். பொதுக்குழுவின் 16 தீர்-மானங்களில் 4 தீர்மானங்கள் மத்திய அரசைக் கண்டித்தபோதும், அவரது பேச்சில் அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லாதது, யதார்த்தமான சந்தேகத்துக்கு உரியதே!

ஆரம்பம் முதல் கடைசிவரை பேச்சு முழுவதிலும் ஆளும் கட்சியை அதிகம் விளாசியவர், திமுகவைக் கடிந்துகொள்ளக்கூட இல்லை! ‘கூட்டணி பற்றி வரும் செய்திகள் எல்லாம், நான் அறிவிக்கும்வரை செய்திகள்தான். முறைப்படி அறிவிக்கும்போதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும்’ என்கிறபடி விஜயகாந்த் பேச, அரங்கில் இருந்த கட்சியினருக்கு, ஒரு வட்டம் தலையைச் சுற்றாத குறைதான்!

எப்படியும் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போறாரு... அதை முன்னாடியே சொன்னாதான் என்னவாம்? என முரசு அறிவித்து கட்சிக்காரர்கள் புலம்பாததுதான் பாக்கி!

இதுவா, அதுவா என வந்திருந்தவர்களுக்கு திமுகவுடன் கூட்டணிக்கு நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு என்பது மட்டும் தெளிவு (!) ஆகிவிட்டது.

மூன்றாவது அணி, இடதுசாரி அணி, இடதுசாரிஜனநாயக அணி எனச்

சொல்லப்-படுவது எல்லாம் தேர்தல் அரசியலில் பலம் பெறுவதற்குள், எந்தக் கொள்கை கனமும் இல்லாமல், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த், தான் ஒரு தவிர்க்கமுடியாத சக்தி என்று காட்டிவிட்டார். அகில இந்திய கட்சிகளின் தலைவர்களை போயஸ் தோட்டத்துக்கு வரவைத்து சந்திக்கும் சக்தி படைத்த ஜெயலலிதா, கடந்த தேர்தலில் விஜயகாந்தையும் அதைப் போலவே சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இது ஜெயலலிதாவுக்கு பின்னடைவா என்பதைவிட, தேமுதிகவுக்கு முன்னேற்றம் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். தொடக்கத்தில் இருந்தே இந்த பாணியில்தான் விஜயகாந்த் கட்சியின் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.

திமுகவின் அரசியல் வரலாறு இன்னொரு முறை எழுதப்படும்போது, அதில் தேமுதிகவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்தால், அது பிழையானதாகவே இருக்கும். சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளியதோடு, சட்டமன்றக் கட்சிக் குழு எனும் நிலையைக்கூட பெறமுடியாதபடி, திமுகவுக்கு முதல் முறையாக தேமுதிக கடும் அதிர்ச்சி அளித்தது காலத்தின் அழிக்கமுடியாத பதிவு இல்லையா!

ஆனால், காலத்தின் கோலம் எந்த திமுகவை தேமுதிக பின்னோக்கித் தள்ளியதோ அதே திமுகவுடன் கூட்டணி சேரப் போகிறது என்பதுதான்! நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? கூட்டணி இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்ற கணக்குதான், இந்த நிலைப்பாட்டுக்கு வரவைத்து இருக்கிறது.

ஆனால், கூட்டணி இல்லாமலேயே தேமுதிக பெற்ற வாக்குகள்தான் அதிகம் என்பது பதிவான வரலாறு. கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் 2006 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, 10.06 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று, முக்கிய எதிர்க்கட்சியாக ஆனபோதும், 7.9 சதவீத வாக்குகளையே தேமுதிகவால் பெறமுடிந்தது.

மீண்டும் கூட்டணிப் பயணம் செய்வது தேமுதிகவுக்கு ஏறுமுகமாக இருக்குமா? இறங்குமுகமாக இருக்குமா? என்பதுதான் அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்-படும் கேள்வியாக இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணிதான் தீர்மானிக்கும். காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கோ திமுகவுக்கோ பாதுகாப்பான கூட்டணியாக அது இருக்கும். 2004-ல் இருந்து திமுக காங்கிரசையும் காங்கிரஸ் திமுகவையும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கின்றன. இடையில் ஜெ. தானே வலியப்போய் ஆதரவு தருகிறேன் என்று காங்கிரசுக்குச் சொல்லிப்பார்த்தார், ம்ஹூம்... மசியவில்லை. இப்போது காங்கிரசையும் மத்திய அரசையும் வெளுத்துக் கட்டி கிட்டத்தட்ட பாஜக பக்கம் அவர் சாய்ந்தே விட்டார். சமீபத்தில் அவர் எந்தகட்சியுடனும் கூட்டணி இல்லை என்று சொன்னது ஒரு தேர்தல் தந்திரமாக, களத்தை ஆழம்பார்க்கும் உத்தியாகக் கருதப்பட்டாலும் மின்வெட்டு, கட்டண உயர்வு போன்ற பெரும் பிரச்னைகளை வைத்துக் கொண்டே இவர் இப்படிப் பேசுகிறாரே என்று திமுகவையும் யோசிக்க வைத்திருக்கிறது. “மத்தியில் ராகுல்காந்தி துணைத்தலைவராகியதால் காங்கிரசின் அணுகுமுறையிலும் மாற்றம் வரும். திமுகவும் நாடாளுமன்றத்துக்கு வேறு உத்தியைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு வழியாகத்தான் டெசோ அமைப்புக்கும் உயிர் கொடுத்து வைத்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டுகிறார் விமர்சகர் ஒருவர்.

மத்தியில் இம்முறை தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணிக்கோ பாஜக கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைப்பது சிரமமாகவே இருக்கும். காங்கிரசுக்கு எதிராக, ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிரான மக்கள மனநிலை வேலை செய்யும். எனவே மூன்றாவது அணிக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். இதை முன்னிட்டு காங்கிரஸ் இல்லாமல் ஒரு அணியை அமைக்கவும் திமுகவில் சிந்தனை இருக்கிறது. “தேமுதிகவிலே திமுக என்பதும் இருக்கிறதே?” என்று கருணாநிதி கடந்த ஜனவரி ஆறாம்தேதி கூறியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த ஆண்டில் கனிமொழியின் மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறதை வைத்து அப்பதவியை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுத்து திமுக சார்பில் பேரம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.  ஏற்கெனவே ஸ்டாலின் ஒரு பத்திரிகை பேட்டியில் “நண்பர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளு-மன்றத் தேர்தலின் போது எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்” என்று சூசகமாகக் கூறியதையும் இதனுடன் கூட்டிக் கழித்துப் பார்க்கவேண்டும்.

எப்போதும் அதிமுக திமுக என்றே குதிரை ஏறிவரும் காங்கிரஸ் இம்முறை இரண்டையும் கழற்றிவிட்டு தேமுதிகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்பும் என்றும் ஒரு ஊகம் பலமாக உலவுகிறது.

தேமுதிக திமுக அணியில் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று பரவலாகக் கருதப்-படுவது பற்றி அரசியல் விமர்சகர் ஞாநியுடன் பேசினோம். அவர் அதிமுக- திமுக இருகட்சிகளுடன் கூட்டணி சேர்வதால் தேமுதிகவுக்குப் பயனில்லை என்கிறார். “காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக இந்தக்கட்சிகளை விட்டுவிட்டு விஜயகாந்த் தனியாக ஓர் அணியை அமைக்கவேண்டும். அதில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால் தேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். விடுதலைச் சிறுத்தைகளை திமுக அணியிலிருந்து ஒரு வேளை வெளியேற்றிவிட்டால் அவர்களையும் இந்த அணியில் சேர்த்துக்கொள்ளலாம்” என்கிறார் ஞாநி.

“விஜயகாந்தைப் பொருத்தவரை அவருக்குக் குறியெல்லாம் சட்டமன்றத் தேர்தல்தான். வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. எனவே அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மேம்போக்கான உறவுள்ள கூட்டணி-யையே அவர் கட்ட விரும்புகிறார்” என்று கூறுகிறார் தேமுதிக தலைமைக்கு நெருக்கமான ஒருவர்.

இந்த நிலையில், தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் பேசுவது, மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை வாங்குவதற்கான பேர வலுவைக் கூட்டுவதற்குத்தான் என்கிறார், மூத்த பத்திரிகையாளரான சிகாமணி. “மக்களவைத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு கணிசமான வெற்றியை விஜயகாந்த் பெற்றுவிடமுடியாது. கடந்த தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவுடன் கூட்டணி என்று சொன்னார். இப்போது, அதிமுகவைத் தோற்கடிப்போம் என்கிறார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கும்போது, அவர் இலக்கு வைத்துள்ள 2016 சட்டமன்றத் தேர்தலில், தேமுதிகதான் மாற்று என விஜயகாந்த் கூறமுடியாது. அந்த நம்பகத்தன்மையை இழக்கவேண்டியது வரும். எனினும், மக்களவைத் தேர்தல் வருவதற்குள் பல மாற்றங்கள் நடக்-கவும் வாய்ப்பு உண்டு” என்கிறார், சிகாமணி.

தேமுதிகவைப் பொறுத்தவரை, இப்போதைக்கு கட்சி அமைப்பை வலுப்-படுத்தும் முயற்சியில் அக்கட்சி இறங்கி இருக்கிறது. பூத் கமிட்டிகள் அமைக்க-வேண்டும் என்று பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருப்பது இதற்கான நடவடிக்கையே.

தேமுதிக கற்றுக்கொள்வதற்கு முன் மாதிரியாக இரு கட்சிகள் இருக்கின்றன. அவை மதிமுகவும் காங்கிரஸும். திமுகவில் இருந்து பிரிந்த பின்னர் முக்கியமான மாற்று சக்தியாக மதிமுக கருதப்பட்டது. ஆனால் அதிமுக, திமுக இரு கட்சிகளுடன் மாறிமாறி  கூட்டணி சேர்ந்து இன்னும் உரிய இடத்தைப் பிடிக்கத் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. தேர்தலுக்குத் தேர்தல் ஒரு கட்சியுடன் சேர்ந்ததால் அக்கட்சியின் வளர்ச்சி தேங்கிவிட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. காங்கிரஸுக்கும் கடந்த 40 ஆண்டுகளாக திமுக அதிமுகவுடன் இணைந்தே தேர்தல்களைக் கண்டதில் தமிழகத்தில் வளர்ச்சி என்பதை விட வீழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது.

இதுதான் கூட்டணி அரசியலின் பாதகம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் தக்கவைத்துக்கொள்ள கூட்டணி அவசியமாக இருக்கிறது. விஜயகாந்த் தன் காயை கவனமாகவே நகர்த்தவேண்டும்!  இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவதூறு  வழக்குகள் பாயும் அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

பிப்ரவரி, 2013.